உறவும் உணர்வும்
உன்னை பிரிந்திட எனக்கும், என்னைப் பிரிந்திட உனக்கும் எத்தனையோ காரணங்கள் இருந்தன நம்மிடம். ஆனால் அவையெல்லாம் நமக்குள்ளான சண்டையின்பொழுது பயன்பட்டனவே ஒழிய பெரியதாக ஒன்றும் செய்துவிடவில்லை...
பெரியதாக செய்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்ததுதான். ஆனால் பலனில்லை, அது வெறும் எதிர்பார்ப்புதான் வேண்டுதல் இல்லை.
தெரிந்தவர் தெரியாதவர் பழக்கத்தில் இருப்பவர் நேற்று கைகுலுக்கி நட்பானவர் ஆரம்பகாலம் முதல் இன்றுவரை இருக்கும் குடி நண்பர்கள் என்று இருக்கும் என் பட்டாளத்தை விட்டுவிட்டு உனக்காக, உன் ஒருத்திக்காக மட்டுமே வாழ்ந்துவிட வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இன்று உனக்காக அவர்களை விட்டு விட்டு உன் கண்ணிலும் படாமல் எங்கேயாவது சென்று விடலாம் என்றே தோன்றுகிறது.
இதோ இங்கே என்முன் இருக்கும் சன்னலின் வெளியே இருக்கும் தூசு துப்பைகளின் மத்தியில் அவனின் பந்துவிளையாட்டு மட்டுமே முக்கியம் என்றிருக்கும் அந்தச் சிறுவனைப்போலவே இருந்தேன். இப்பொழுது அதுபோலவே இருக்க ஆசைப்படுகிறேன். இந்த மாற்றம் எதனாலென்றால் உன்னாலென்று ஒரே வரியில் சொல்லிவிட முடிகிறது என்னால்! ஏன்? தெரியாது.
"என்ன வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்? அப்படி என்ன தெரிகிறது அந்த சன்னலின் வெளியே? நட்சத்திர குவியலா?" பிரத்யேக / பிரபல மனநோயாளி மருத்துவர், மரு.ராமகிருஷ்ணன் என்னைப்பார்த்து.
"அந்த நட்சத்திரக்குவியலுக்கு மத்தியில் ஓர் குப்பைக்கூளம் இருக்கிறதே டாக்டர். அதை என்ன செய்வதென யோசிக்கிறேன்" என்றேன் நான்.
"எனக்கு அங்கே தெரிவது நட்சத்திரக்குவியல் மட்டும்தான்"
"எனக்கு நட்சத்திரக்குவியலும் டாக்டர்"
"சரி, இங்கே வந்து உட்காருங்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதைப் பற்றி பேசுவோம்"
உட்கார்ந்து, இன்சர்ட் பண்ணியிருந்த சட்டையை சற்றே மேலே இழுத்துவிட்டுக்கொண்டேன்," டாக்டர் என் பெயர்"
"இருங்கள், ஒரு நிமிடம்" என்றுவிட்டு மேசை மேலிருந்த ஒரு கோப்பின் மீது கண் வைத்தார். சில விநாடிகள் அதை பார்த்துவிட்டு என்னை பார்த்து,"சொல்லுங்கள்"
"எனது பெயர்"
"ஏன் அங்கேயே நிற்கிறீர்கள். உங்கள் பெயர் இங்கு யாருக்கும் முக்கியம் இல்லை. நீங்கள் என் நண்பர். உங்கள் பிரச்சனையை மட்டும் சொல்லுங்கள் நண்பரே"
உண்மையில் நான் மேலும் குழம்பிப் போயிருந்தேன். இருப்பினும்," என் வாழ்க்கையில் ஒரு பெண்ணால் பிரச்சனை டாக்டர்"
"மனைவியா?"
"இல்லை காதலி"
"உங்களின் வயது என்ன?"
"முப்பத்தி ஒன்று நடக்கிறது"
"கொஞ்சம் அதை உட்காரச் சொல்லுங்கள். ஆனால் நியாயமாக பார்த்தால்"
"அநியாயமாகவே பாருங்கள். எல்லாமே தாமதமாகதான்"
"இந்த காதலுமா?"
"ஆம்"
"சரி எப்பொழுது ஆரம்பித்தது?"
"11 மாதங்கள் ஆகிவிட்டது அடுத்த மாதம் எனக்கு இன்னொரு வயது அதிகமாகிவிடும்"
"நான் விசாரித்தது உங்கள் வயதைப் பற்றி இல்லை, உங்களின் காதலைப் பற்றி"
"ஓ! அதுவா. மிகவும் எதேட்சையாக துவங்கியது டாக்டர்"
"எதேட்சையாக என்றால்"
"அவளை நான் முதலில் அவளை சந்தித்தது ரேசன் கடையில் நைட்டியுடன் நின்றுகொண்டு அரிசியை மூட்டை கட்டிக் கொண்டிருந்தாள்"
"ம்ம் அப்பறம்"
"பார்த்தவுடன் அந்த எளிமையே பிடித்திருந்தது. வாசலில் நிற்கும் வண்டியை துடைத்து சுத்தம் செய்வதற்கே முழுமுக மேக்கப்பில் வெளிவரும் பெண்களுக்கு மத்தியில் இவள் சற்று வித்தியாசமாக இருந்ததும் நான் அவளை பார்த்ததும்தான் பிரச்சனை"
"தொடருங்கள் கேட்போம்"
"எண்ணெய் வைத்து வாரிய கூந்தல், காதணி, வளையல், மோதிரம், ஏன் மோதிரம் அணிந்ததற்கான எந்த தடயமும் இல்லை. ஆனால் கண்ணில் இருந்த திமிர் அளவிட முடியாதது டாக்டர்"
"பேசினீர்களா?"
"இல்லை அவளே பேசினாள்"
"அவளேவா? என்ன சொன்னாள்?"
"அண்ணா இந்த அரிசி மூட்டையை கொஞ்சம் தூக்கி அந்த ஸ்கூட்டில வைக்கறீங்களா என்றாள்"
"அய்யய்யோ அதற்கப்பறம்?"
"நான் அண்ணா என்னும் பெண்களுக்கெல்லாம் உதவி செய்வதில்லை என்றேன். உடனே சரி அக்கா இந்த மூட்டையை தூக்கி உதவுங்களேன் என்று விட்டாள்"
ஹாஹாஹா என்ற பெருத்த சிரிப்புடன்,"தொடருங்கள்" என்றார் மருத்துவர். ஆனால் அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
"நீங்க சிரித்து முடியுங்கள் டாக்டர் நான் பிறகு தொடர்கிறேன்"
"மன்னியுங்கள் நண்பரே. நீங்கள் தொடருங்கள்"
"அதற்குப் பிறகு இரண்டு மூன்று தடவே அவளை அதே ரேசனில் பார்த்தேன். அவளை பின்தொடரும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அவளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தேன்"
"பின் தொடர்ந்தீர்களா?"
"இல்லை. அரசாங்கத்திற்கு 500 ரூபாய் செலவு அவ்வளவுதான்"
"புரியவில்லையே"
"அவளை ரேசன் கடையில்தானே பார்த்தேன்? அங்கிருந்த ஊழியருக்கு 500 தந்தேன் அவளின் வீட்டு முகவரி ஆதார் எண் மொபைல் எண் வரை வாங்கி விட்டேன். ஆனால் அந்த மொபைல் எண் அவளது அப்பாவுடையது"
"உங்களுக்கு பெரும் ஏமாற்றமாகி இருக்குமே?"
"அதுதான் இல்லை டாக்டர் உண்மையில் நான் அதிகம் சந்தோஷம் அடைந்தேன்."
"ஏன்?"
"அவளுக்கென தனி ரேசன் கார்டு இல்லை எனில் அவளுக்கு இன்னும் திருமணமாகவில்லை"
"அடடே அருமை! தொடருங்கள்"
"ஆனாலும் அவளுக்கு காதலன் இருக்கலாம் அல்லது திருமணமாகி குடும்ப அட்டை பிரித்து வாங்காமல் இருக்கலாம் என்றும் ஒரு எண்ணம் தோன்றிற்று"
"அடுத்ததாக தாலுகா அலுவலகத்திற்கு சென்றுவிட்டீர்களா? அங்கே எவ்வளவு செலவு?"
"அதுதான் இல்லை டாக்டர். நேராக அவளிடமே சென்று விட்டேன். என் விருப்பத்தை அவளிடம் சொல்லிவிட்டு அவளைப் பற்றி கேட்டேன். நான் ஒன்றும் மன்மதன் இல்லையே? அவளிடம் இருந்து பதில் எதுவும் கிடைக்கவில்லை."
"மீண்டும் முயற்சித்தீர்களா?"
"இல்லை டாக்டர். விருப்பம் இல்லாத பெண்ணை பின்தொடர்ந்து தொந்தரவு செய்வது தவறு. அதுமட்டுமின்றி அது மகாபாவம்."
"பின்னே?"
"அவளுடைய மொபைல் எண்ணிற்கு ஒரு 500 செலவு செய்ய வேண்டியதாகிற்று"
"ஓ அப்படி!. ம்ம் பிறகு?"
"கொஞ்சம் கொஞ்சமாக அவளிடம் பேசி அவளை காதலிக்க வைத்துவிட்டேன்."
"இப்பொழுது என்னவாயிற்று? திருமணம் செய்து கொள்ள சொல்கிறாளா? அதற்கெல்லாம் நாங்கள் எதுவும் செய்வதில்லை"
"இல்லை டாக்டர் என் பிரச்சனை வேறு"
"என்ன அது?"
"அவள் என்னிடம் அன்பாக இருக்கிறாள் என்பது எனக்கு புரிகிறது ஆனால் அந்த அன்பை அவள் வெளிக்காட்டும் விதத்திலா அல்லது நான் அதை பெறும் விதத்திலா என்று தெரியவில்லை. எப்பொழுதும் அவளுக்கும் எனக்கும் சண்டை வந்துகொண்டே இருக்கிறது. இதை நீங்கள்தான்"
"நிச்சயமாக இதுபோன்ற பிரச்சனைகளில் தலையிட்டு வக்கீல்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வதில் எனக்கு 10 வருடகால அனுபவம் உண்டு. நீங்கள் எதற்கும் நாளை வாருங்கள். வரும்பொழுது உங்கள் காதலியை உடன் அழைத்து வாருங்களேன்"
"கண்டிப்பாக அது நடக்காது டாக்டர். இதுவே மறுபடியும் ஒரு புது பிரச்சனை ஆகிவிடும். நீங்களும் எதுவும் வெளியே?".
"நிச்சயமாக. நேரமும் இடமும் இதோ இந்த விசிட்டிங் கார்டில் உள்ள இரண்டாவது மொபைல் எண்ணிற்கு அழைத்து கூறிவிடுங்கள். ஹவுஸ் கன்சல்ட் பர்ஸ்ட் நாள் என்று கூறிவிடுங்கள். வரவேற்பறையில் உங்கள் பெயரையும் மொபைல் எண்ணையும் மறக்காமல் கொடுத்துவிட்டு செல்லுங்கள்."
"எப்படி டாக்டர்? உங்கள் நண்பன் என்று கூறி பதிவிட்டுவிடவா?"
"தாரளமாக, ஏனென்றால் உங்களைத்தவிர அனைவரும் அவர்களது பெயரை குறிப்பிட்டு விடுவர். எனது நண்பன் என்று பார்க்கும்போல் அது நீங்கள் என்று புரிந்துகொள்வேன்." என்றார் அதே தரம்மாறா புன்னகையுடன்.
மறுநாள் விடிந்ததும்..
நான் வீட்டிலிருந்து கிளம்பி வழக்கம் போல் அவளை சந்திக்கும் அதே காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்றேன். அவள் சிறிது நேரம் கழித்தே வந்தாள்.
"என்ன இன்று துரை எனக்கு முன்னரே வந்திருக்கிறார் போல?".
" ஆம் ஏன் நான் உனக்காக காத்திருக்க கூடாதா?"
"நிச்சயமாக, அதற்கான முழு உரிமையும் உண்டு"
"பிறகு ஏன் இந்த கேள்வி?"
"ஏன் கேட்க எனக்கு உரிமை இல்லையா?"
"இருக்கிறது. இருந்தாலும் பொது இடத்தில் என்ன கிண்டல் வேண்டி கிடக்கிறது?"
"நான் எத்தனை ஊர்களுக்கு கேட்கும்படி ஸ்பீக்கர் கட்டி இப்பொழுது கேட்டுவிட்டேனாம்?"
"எதற்கு இப்பொழுது நீ கோவப்படுகிறாய்? நீ கோவப்பட்டு என்னையும் கோவப்படுத்தப் பார்கின்றாய்"
"யார் நானா? நான் விளையாட்டாய் கேட்டதுகூட உனக்கு கோவம் வரவைக்கும் என்றால் பிரச்சனை என்னிடம் இல்லை."
"அப்படி என்றால் என்னிடம் என்கிறாயா?"
"அதை நான் சொல்லிவிட முடியுமா? நான் வேண்டாத காதலியாகிவிட்டேன் உனக்கு. பழையது எப்படி இனிக்கும்?"
"நீ ஏன் இப்படி பேசுகிறாய். நீ வேண்டாத காதலி என்றா நான் சொன்னேன்?"
"அதை மட்டும்தான் நீ சொல்லவில்லை"
"சொல்லாமல் அப்படித்தான் நடந்துகொள்கிறேன் என்கிறாயா?"
"அதை நான் சொல்லவில்லை நீயாகத்தான் சொல்கிறாய்!"
ம்ம் எவ்வளவு பேசினாலும் இவளை விட்டு வாழ்வது கடினமே. இறங்கிப்போய்த்தான் ஆக வேண்டும். "நீ என்னை மறுபடியும் மறுபடியும் தவறாகத்தான் புரிந்து கொண்டிருக்கிறாய்"
"இல்லை மிகவும் சரியாக புரிந்து கொண்டிருக்கிறேன். உன்னிடம் பேசி எல்லாம் ஒன்றும் பலனில்லை"
"அப்படியெல்லாம் சொல்லாதே! நீ எப்பொழுதும் எனக்கு ஸ்பெசல்தான். நீ சொல்லுவதைப்போல் பழையது ஆனாலும் நீ கருணைக்கிழங்கு புளிக்குழம்புபோல் மேலும்தான் ருசியும் மணமும் தருவாய்"
"ஓ அப்படியென்றால் நீ என்னை பழையதாகிவிட்டேன் என்று ஒப்புக் கொள்கிறாயல்லவா?"
"இதுதான் உன் பிரச்சனை நான் அமைதியான பின்னும் நீ ஏன் இன்னும் கொதித்துக் கொண்டிருக்கிறாய்?"
"ம்ம் பைத்தியம் பிடித்திருக்கிறது"
"சும்மா இரு. தேவையில்லாமல் பேசாதே!"
"அதை முதலில் நீ செய்! தேவையற்றதை பேசி பிதற்றாதே!"
"சரி விட்டுவிடு."
இந்த சண்டையில் கோவிலை சுற்றி இருக்கும் இதர தெய்வங்களை கும்பிட்டு விட்டனர். கருவறையை நெருங்கியவுடன் அப்படியே அமைதியின் சொரூபமாய் மாறிய அவளைக்கண்டு திகைத்தேன். உண்மையில் நான் எதிர்பாரா மாற்றம் அது! இரண்டொரு நிமிடங்களுக்குமுன் சண்டைக்கோழியாக இருந்தவள்தானா இவள் என்று. ஏனெனில் நான் எப்பொழுதும் வெளியே அவளுக்காக காத்து இருப்பேன். கடவுள் மேல் பெரும் ஈடுபாடு எதுவும் இல்லை. அதனால் இன்றுதான் நான் சீக்கிறமே சென்றதால் இதை காண முடிந்தது. இப்படி ஒரு மாற்றத்தை நான் எதிர்பார்க்கவில்லை.
"என்ன வேண்டிக் கொண்டாய்" என ஆரம்பித்தேன் நான்
"உனக்கு நல்ல புத்தியை அந்த இறைவன் தர வேண்டுமென்று வேண்டினேன். நீ"
"நான் ஒரு இடத்திற்கு கூப்பிடுவேன் அங்கே நீ வர வேண்டும் என்று"
"ஹய்யோ! அதை நீ நேராக என்னிடமே கேட்டு இருக்கலாமே? கடவுள் என்ன இடைத்தரகரா?"
"இருக்கலாம். ஆனால் நான் உன்னை அழைப்பது ஒரு மனநல மருத்துவரை சந்திக்க" வேதாளம் மறுபடியும் மரமேறியது.
"ஓ! முடிவே செய்தாகிவிட்டதா?"
"இல்லை எனக்..."
"வேண்டாம் எதுவும் பேச வேண்டாம் என்னை நீ பைத்தியம் என்று முடிவு செய்திருக்கிறாய் போல. அது அப்படியே இருக்கட்டும்"
"இல்லை நான் சொல்வதை"
"எதையும் கேட்க நான் தயாராக இல்லை. இதோடு முடித்துக் கொள்ளலாம் இனி நீ எனக்கு வேண்டாம்.."
"என்னை கொஞ்சம் பேச விடேன்"
"இல்லை நான் கிளம்புகிறேன்." என்று கோவத்தின் உச்சத்தில் அங்கிருந்து அழுதுகொண்டு முகத்தை கைக்குட்டையில் மறைத்துக் கொண்டே ஓடிவிட்டாள்.
உண்மையில் என்மேல் எதுவும் தவறு இல்லை. அப்படியென்றால் தவறு யார் மேல். ம்ம் புரிந்தது அந்த டாக்டர்மேல்தான். என் பிரச்சனையை என்னிடமே பேசி முடித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவர் என்ன நினைத்தாரோ பாவம்..
நான் கிளம்பி அவரிடம் சென்றேன்.
"டாக்டர்... நேத்து வந்தனே நியாபகம் இருக்குங்களா?"
"ம்ம் இருக்கிறது சொல்லுங்கள். வெளியே சந்திக்க ஏற்பாடு செய்வதாய் சொல்லி இருந்தீர்கள் அல்லவா?"
"ஆம் டாக்டர். ஆனால் அவள் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாள்."
"ஏன் என்னாயிற்று?"
காலையில் நடந்ததை விவரித்தேன். அவரால் சிரிக்க முடியவில்லை போல, பல்லை கடித்துக் கொண்டு நின்றார்.
"ஆனால் நீங்கள் ரொம்ப மோசம். ஒரு பெண்ணிடம் எப்படி பேச வேண்டும் என்றுகூடவா தெரியாது உங்களுக்கு?"
"இதில் என்ன டாக்டர் இருக்கிறது? எனக்கு உரிமை உள்ள ஒருத்தியிடம் நான் சற்று மரியாதை எதிர்பார்ப்பதில் என்ன தவறு இருக்கிறது?"
"அதற்கான மரியாதை நீங்கள் தந்தீர்களா?"
"என்ன டாக்டர் அவளுக்கு என்ன மரியாதை தருவது?"
"என்ன மரியாதை தருவதா? பின்னர் அவளுக்கான மரியாதை தர வேண்டி இல்லையா?"
"டாக்டர்! அவள் எனக்கானவள். அவளுக்கு எதற்கு மரியாதை தர வேண்டும்?"
"நீங்களும் அவளுக்கானவர்தானே? பிறகு ஏன் அவளிடம் மரியாதை எதிர் பார்க்கறீர்கள்?"
"என்ன இருந்தா"
"இல்லை நீங்கள் ஆண் என்று மட்டும் சொல்லாதீர்கள். பெண்களை மதித்து சரிசமமாக நடத்துபவன்தான் ஆண்"
"அப்படியென்றால்"
"நீங்கள் நிச்சயம் ஆண் இல்லை. சராசரி மிருகம்"
"புரியவில்லையே"
"உங்கள் அம்மாவிற்கு மரியாதை கொடுப்பீர்களா?"
"இல்லை"
"ஏன்?"
"அவள் என் அம்மா"
"அவர் உங்களுக்கு மரியாதை கொடுப்பாரா?"
"இல்லை"
"ஏனென்றால் அவர் உங்கள் அம்மா! ஒரு பொதுவான சம உறவு இருக்கிறது புரிகிறதா? உங்களிடம் உங்கள் அம்மாவற்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு உரிமை ஏன் உங்கள் காதலிக்கு இருக்கக் கூடாது?"
"இருந்தாலும்"
"இருந்தாலும் என்றெல்லாம் எதுவுமில்லை நண்பரே! நேற்று நான் உங்கள் காதலியையும் வர சொன்னதற்கு காரணம் பிரச்சினை யாரிடம் என்று தெரிந்து கொள்ளத்தான்"
"ம்ம் இப்பொழுது"
"உறுதியாக உங்கள்மீதுதான் என்று புரிந்துகொண்டேன். நீங்கள் முடிந்த அளவிற்கு சிந்தித்து செயல் படுங்கள். அவர்களை ஒரு பெண்ணாக வேண்டாம். நீங்கள் விரும்பும் ஒரு பிராணியாக பூனையாகவோ கிளியாகவோ நினைத்துக் கொள்ளுங்களேன். உங்கள் செல்லப்பிராணியை நீங்கள் ஒருபொழுதும் துன்புறுத்த விழைய மாட்டீர்கள்"
"ஆனால் டாக்டர், செல்லப்பிராணி பேசாதே?"
பெரியதாக சிரித்துவிட்டு,"இதற்குமேல் நீங்களாக புரிந்துகொண்டு அமைதியாக உட்கார்ந்து சிந்தித்தால் மட்டுமே தெளிவு பிறக்கும். என்னிடம் இதற்கு மருந்து எதுவும் கிடையாது"
"சரி டாக்டர் நான் என்ன செய்வது?"
"புரியவில்லை"
"என் கோவத்தை கட்டுபடுத்த, அமைதியாக"
"பாடல்கள் கேளுங்கள். இசை மனதை தெளிவாக்கும்"
"சரி டாக்டர். நன்றி"
அதற்குப்பின் சென்று அவளை பார்க்க முயன்றேன் முடியவில்லை. போனில் தொடர்பு கொள்ள முயன்றேன் என் எண்ணை ப்ளாக் செய்துவிட்டாள். நாட்கள் கடந்தன..
இசை, பாடல், புத்தகம், சில சினிமாக்கள் என சிறிது நாட்கள் காலம் கடத்தினேன். பின் வேலையில் ஒரு பிடிபாடு வந்து அதன்பின் ஓட ஆரம்பித்துவிட்டேன். அதற்குப் பின் வாழ்க்கை ஒரு நேர்கோட்டில் செல்ல ஆரம்பித்துவிட்டது.
இப்பொழுது ஒரு முற்றுப்புள்ளியில் வந்து நிற்கிறது இந்த வாழ்க்கை. இவ்வளவு வேகத்தில் வாழ்க்கை நகரும் என்று எனக்கு தெரியாது. எதிர்பாராமல் 63 வயதில் வந்து நிற்கிறது இன்று.
ஆனால் இன்னமும் அந்த நான் இழந்த அந்த காதல் எனக்கு கிடைக்கவில்லை. அதற்குப்பின் அந்த குற்ற உணர்ச்சியிலேயே நான் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லை. அவளை புரிந்துகொள்ளாமல் நான் இழைத்த துரோகத்தை வேறு பெண்ணுக்கு செய்திட கூடாது என்று.
இந்த சிகரெட்டை கீழே போட்டுவிட்டேன். அணையப்போகின்றது..
- 2017 பதிவுகள்
Comments
Post a Comment